தக்காளி - கிரீம் சூப்
தேவையானவை:
தக்காளி - 12, வெங்காயம், செலரி இலை, கேரட் தலா இன்று, பூண்டு - 3 பல், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன், பிரிஞ்சி இலை - ஒன்று, மிளகு - 4, ஃபிரெஷ் கிரீம் - 2 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வாணெலியில் எண்ணெய் மற்றும் வெண்ணெயை சூடாக்கிக் கொள்ளவும். இதில் பிரிஞ்சி இலை, நறுக்கிய வெங்காயம், பூண்டு, செலரி இலை ஆகியவற்றைச் சேர்த்து லேசாக வதக்கவும். பின்னர் நறுக்கிய கேரட், தக்காளி, உப்பு, மிளகு சேர்த்து வதக்கி, கலவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். அடுப்பிலிருந்து இறக்கும் போது பிரிஞ்சி இலை மற்றும் மிளகை மட்டும் தனியாக எடுத்துவிட்டு, வடிகட்டி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். பின்னர் உப்பு, மிளகுத்தூள், ஃபிரெஷ் கிரீம் சேர்த்து கிளறி இறக்கி சூடாக பரிமாறவும்
தொண்டக்காய வெபுடு
தேவையானவை: கோவைக்காய் - கால் கிலோ, எண்ணெய், உப்பு - தேவைக்கு, வெங்காயம் - ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், உளுந்தம் பருப்பு -ஒரு டீஸ்பூன்.
வறுத்து அரைக்க: வரமிளகாய் - 5, சீரகம் - அரை டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து, தனியா ஒரு டீஸ்பூன்.
செய்முறை: வறுத்து அரைக்கக் கொடுத்துள்ளவற்றை வெறும் வாணலியில் வறுத்து,
சிறிதளவு உப்பு சேர்த்து சற்றே கொரகொரப்பாக அரைக்கவும். கோவைக்காயையும்
வெங்காயத்தையும் நீளவாக்கில் நறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும், கடுகைப் போட்டு பொரிய விடவும். பின்னர் உளுந்தம் பருப்பைச் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து சற்றே பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர் நறுக்கிய கோவைக்காய், மஞ்சள்தூள் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, காய் நன்றாக வேகும் வரை மூடி வைத்து சமைக்கவும். பின்னர் வறுத்து அரைத்தப் பொடியைத் தூவி, 10 நிமிடம் வரை நன்றாக வதக்கி இறக்கவும். சூடான சாதம் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்.
அல்லம் பச்சடி
தேவையானவை: இஞ்சி - 2 இன்ச், எண்ணெய் - தேவைக்கு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, வெல்லம் - தலா ஒரு டீஸ்பூன், புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, வரமிளகாய் - 5, வெந்தயம் - கால் டீஸ்பூன்.
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து, பெருங்காயம் ஒரு சிட்டிகை.
செய்முறை: இஞ்சியை சிறியத் துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய்
ஊற்றி, காய்ந்ததும், கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, கிள்ளிய வரமிளகாய், வெந்தயம் சேர்த்து, பருப்புகள் பொன்னிறமாகும் வரை வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் இஞ்சி, புளியைச் சேர்த்து, இஞ்சி பொன்னிறமாகி, சற்றே சுருங்கும் வரை வதக்கி, அனைத்தையும் மிக்ஸியில் போடவும். பின்னர் அவற்றுடன் வெல்லம், உப்பு சேர்த்து மையாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு தாளித்து, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து வதக்கி, பச்சடியில் கொட்டி, பரிமாறவும்
கருத்துகள்
கருத்துரையிடுக