வாழை - பறங்கி பாட் கறி
தேவையானவை: வாழைக்காய் - ஒன்று, பறங்கிக்காய் - 100 கிராம், வெங்காயம் - ஒன்று, தக்காளி - 2, மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், தனியாத்தூள் 4 டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, வெல்லம் - 2 டீஸ்பூன்.
செய்முறை: வாணலியில் எண்ணெய்யை சூடாக்கி, கடுகு, உளுந்து,
கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், தக்காளி, வாழைக்காய், பறங்கிக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் மிளகாய்த்தூள், தனியாத்தூள், சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பின்னர் புளித்தண்ணீர் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் வெல்லம் போட்டு, கிளறி இறக்கவும்.
குறிப்பு: இந்தக் கறியை சூடான சாதத்துடன் பரிமாறலாம். மண் சட்டியில் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்!
வாழைக்காய் திரக்கல்
தேவையானவை: வாழைக்காய் - ஒன்று, கத்திரிக்காய், உருளைக்கிழங்கு
தலா 2, தேங்காய்த்துருவல் - 50 கிராம், சோம்பு, சீரகம் - தலா 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, கறிவேப்பிலை சிறிதளவு, உப்பு - தேவைக்கு.
செய்முறை: வெறும் வாணலியில் தேங்காய்த்துருவல், சோம்பு, சீரகம், காய்ந்த மிளகாயை வறுத்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடாக்கி, சோம்பு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின்னர் நறுக்கிய வாழைக்காய், கத்திரிக்காய், உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்றாக வதக்கி, அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து, இரண்டு கொதி வந்ததும் இறக்கவும்.
குறிப்பு: செட்டிநாட்டு டிஷ் இது| இட்லி / தோசை / சப்பாத்தியுடன் சாப்பிட ஏற்றது.
கருத்துகள்
கருத்துரையிடுக