வாழையிலை மீன் வறுவல்
தேவையானவை: சங்கரா மீன்500 கிராம் (தலை பகுதியை நீக்காமல், நன்றாக சுத்தம் செய்து, கழுவிக்கொள்ளவும்), மிளகாய்த்தூள் - 30 கிராம், மஞ்சள்தூள் - 10 கிராம், உப்பு - தேவைக்கு, இஞ்சி, பூண்டு விழுது - 4 டீஸ்பூன், வாழை இலை - 8 (சிறிய துண்டாக வெட்டியது), வாழைநார் - சிறிதளவு, தயிர் - 2 டீஸ்பூன்.
அரைக்க: கொத்துமல்லித்தழை - 40 கிராம், புதினா - 100 கிராம், உரித்த பூண்டு 8 பற்கள், பச்சைமிளகாய் - 2, எலுமிச்சைச்சாறு - 3 டீஸ்பூன், இஞ்சி - சிறிதளவு, உப்பு தேவைக்கு. இவற்றை விழுதாக்கிக்கொள்ளவும்.
செய்முறை: சுத்தம் செய்த மீனின் மீது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், இஞ்சி, பூண்டு விழுது, தயிர், அரைத்த விழுது, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாகப் பிசறவும். பின்னர் அரை மணி நேரம் ஊறவைத்து, வாழை இலையில் சுற்றி, வாழைநாரால் கட்டவும். பின்னர் காய்ந்த தோசைக்கல்லில் போட்டு, சுட்டு எடுத்து, வாழை இலையை நீக்கிப் பரிமாறவும்.
குறிப்பு: வாழை இலையில் மீனை வைத்து சுற்றுவதற்கு முன்பாக, வாழை இலையை சூடு தண்ணீரில் போட்டு உடனே எடுக்கவும். இப்படிச் செய்தால், மடிக்கும்போது வாழை இலை கிழியாமல் இருக்கும்!
கேரமல் பனானா வித் வெனிலா ஐஸ்க்ரீம்
தேவையானவை: வாழைப்பழம் - ஒன்று (நீளமாக இரண்டாக நறுக்கவும்), வெனிலா ஐஸ்க்ரீம் (பொடியாக நறுக்கவும்). 100 கிராம், பாதாம் - 2
கேரமல் செய்ய: சர்க்கரை
100 கிராம், தண்ணீர் -3 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு அரை டீஸ்பூன், வெண்ணெய் 4 டீஸ்பூன், மில்க் மெய்டு - 50 கிராம். வாணலியில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கரைந்ததும், வெண்ணெய், எலுமிச்சைச்சாறு, மில்க் மெய்டு சேர்த்து, நன்றாகக் கிளறி இறக்கவும்.
செய்முறை: ஒரு கிண்ணத்தில், நறுக்கிய வாழைப்ழத்தை வைத்து, அதன் மேலே வெனிலா ஐஸ்க்ரீமை வைக்கவும் அதன் மீது கேரமலை ஊற்றி, பாதாமைத் தூவி பரிமாறவும்
வாழைப்பழம் -கோதுமை போளி
தேவையானவை: வாழைப்பழம் - ஒன்று, கோதுமை மாவு - 500 கிராம், உப்பு தேவைக்கு.
பூரணம் செய்ய: பாசிப்பருப்பு, வெல்லம் - தலா 100 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - 3 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - 50 கிராம்.
செய்முறை: கோதுமை மாவு, உப்பு, வாழைப்பழத் துண்டுகளை சேர்த்து, சப்பாத்தி
மாவு பதத்தில் பிசைந்து, அரை மணி நேரம் ஊறவைக்கவும். பாசிப்பருப்பை நன்றாக வேகவைக்கவும். வெல்லத்தை கரைத்து, அடுப்பில் வைத்து, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடிகட்டவும். வாணலியில் நெய் விட்டு, வெந்த பாசிப்பருப்பு, வெல்லக்கரைசல், ஏலக்காய்த்தூள், தேங்காய்த்துருவல் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும். ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பிசைந்து, ஊறவைத்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, வட்டமாகத் திரட்டவும். அதன் நடுவே பூரண உருண்டையை வைத்து, மூடி, நன்றாக வட்டமாகத் திரட்டி, காய்ந்த தோசைக்கல்லில் போட்டு, திருப்பி விட்டு சுட்டு எடுக்கவும்.
வாழைப்பூ-கோலா
தேவையானவை: வாழைப்பூ
100 கிராம் (ஆய்ந்து, பொடியாக நறுக்கவும்), துவரம் பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு - 75 கிராம், சோம்பு, சீரகம் - தலா 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, பெரிய வெங்காயம், தக்காளி தலா ஒன்று, புளி, கொத்துமல்லித்தழை - சிறிதளவு, பூண்டு - 6 பற்கள், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.
செய்முறை: துவரம் பருப்பு, கடலைப்பருப்பை தனித்தனியாக ஒரு மணி நேரம்
ஊறவைத்து, சோம்பு, சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து 'அடை'க்கு அரைப்பதைப் போன்று அரைக்கவும். வாணலியில் எண்ணெய்யை சூடாக்கி, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, உரித்த பூண்டு சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, அரைத்த பருப்புக் கலவையைச் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறவும். கலவையானது பாதியளவு வெந்ததும், பொடியாக நறுக்கிய வாழைப்பூ, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும். பின்னர் கொத்துமல்லித்தழையைத் தூவி இறக்கவும்.
குறிப்பு: செட்டிநாட்டு ஸ்பெஷலான இந்த டிஷ்ஷை, அடுப்பை மிதமான தீயில் வைத்தே செய்ய வேண்டும். சாம்பார் சாதம் / தயிர் சாதம் / சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக